தோல்வி அடைந்துவிட்டோம் என்ன செய்வது என மனம் தளர்ந்து குற்ற உணர்வுடன் தன்னைப்பற்றிய தாழ்வான எண்ணங்களைத் தனக்குரிய அடையாளமாக்கி கொள்ளாமல் ,என்ன செய்யாமல் இருந்து விட்டோம் என யோசித்து ஆராய்ந்து பாருங்கள் .மிகச்சிறிய தவறுகள் அல்லது தடைகள் தான் உங்களை வெற்றி முத்தமிடாமல் இருக்க காரணமாக இருந்திருக்கும் .அந்த காரணங்களில் கீழ்க்காணும் இவைகளும் நிச்சியம் இருந்திருக்கும்
* அப்புறம் பார்க்கலாம் * நாம் என்ன செய்ய முடியும் ? * அட போப்பா * அதிஷ்டம் வேணும்பா * அந்த நேரத்தில் அவர் (கள் ) அதை செய்திருந்தால் எனக்கும் வெற்றி கிடைத்திருக்கும் .
மேலே கூறிய வார்த்தைகள் உங்களிடமிருந்து வந்திருக்கும் என்றால் நிச்சியம் இந்த கட்டுரையின் முதல் வார்த்தை உங்களுக்கு சொந்தமாகியிருக்கும் .அதற்காக வருத்தப்பட்டு உட்காந்திருக்காதீர்கள் .அத்தோடு எதுவும் முடிந்து போகவில்லை .
அப்புறம் பார்க்கலாம் என்ற தோல்வியின் கரங்கள் உங்களை இறுக்கி பிடிக்காமல் பார்த்து கொள்ளுங்கள் .அப்புறம் பார்க்கலாம் என்ற தள்ளிபோடும் மனப்பக்குவம் மரமாக்க நினைத்து விதையை மண்ணிற்கு மேல் வீசுவது செயல் .விதை முளைக்க சந்தர்ப்பமே அளிக்காமல் பின் மரமாகிவிடும் என நம்புவது நகைப்பிற்குரிய விடயமில்லையா .?வெற்றிக்கான வித்தை விரயம் செய்யாமல் வித்திடுங்கள் .வெற்றி பெரிய மரமாகி உங்களுக்கு என்றும் பயனும் நிழலும் தரும் .
அடுத்தது நாம் என்ன செய்ய முடியும் ?சற்று நினைத்துப் பாருங்கள் .!உங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பம் சரியானது மட்டுமல்ல ,சந்தோசமானதும் கூட .ஆனால் ,நாம் என்ன செய்ய முடியும் ? கிடைத்த சந்தர்பம் அப்படி என்ற கேள்வியை உங்களிடம் கேட்டுக்கொள்ளாமல் ,நாம் என்ன செய்ய வேண்டும் என்று முன்பே கேள்வியை கேட்டிருந்தால் வெற்றிக்கான விடை உங்களிடமே கிடைத்திருக்கும் .என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதை ஆலோசித்து உங்களின் வெற்றியைத் தீர்மானியுங்கள் .
அட போப்பா என்பது ஆர்வமின்மையின் அழகான அடையாளம் .அந்த அழகில் மயங்கியதால் தான் வெற்றியை அடையாமல் மயங்கி விழுந்து விட்டீர்கள் .அட போப்பா என்று அதிகம் உபயோகபடுத்தினால் ஆர்வமின்மையின் ஆதிக்கத்தின் கீழ் உங்கள் மனம் தளர்ந்து கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும் .
அதிஷ்டம் என்பது வெற்றியாளருக்கு அணிவிக்கும் சால்வை அல்லது மாலை போன்றது .வெற்றி பெற்றதுக்கு பிறகு தான் வெற்றியாளருக்கு அளிக்கப்படுகிறது .அது போலத்தான் வெற்றிபெற்ற பிறகுதான் அவருக்கு அதிஷ்டம் என்று சொல்வோம் .அதுமட்டுமல்ல அதிஷ்டம் என்ற ஒன்று இருந்தாலும் அது இஷ்டம் என்று தான் இருக்கும் .அது இஷ்டம் போல் நடக்க ஆரம்பிக்க வேண்டும் .அப்படி நடக்க ஆரம்பித்தால் உங்கள் முன்னால் வெற்றிப்பாதை நீண்டு கொண்டே போகும் .
அந்த நேரத்தில் அவர்கள் அப்படி செய்திருந்தால் எனக்கு வெற்றி கிடைத்திருக்கும் .இது போன்ற வெற்றிக்கணக்கிற்காக சூத்திரத்தை தனதாக்கிக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகம் .உங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களில் கோல் கீப்பரின் கைக்கு கிடைக்காமல் பந்தை உதைத்து கோல் செய்ய வேண்டும் என்பது தான் வெற்றியின் சரியான விதி .மாறாக கோல் கீப்பர் பிடிக்காமல் இருந்திருந்தால் நான் அடித்த பந்து கோல் ஆகியிருக்கும் .நான் என்ன செய்ய என சொல்லுவது எப்படி .? கல்லின் தன்மையை உணர்ந்து செயல்பட்டால் தான் வெற்றி என்ற சிலை உங்களுக்கு கிடைக்கும் .உளி உங்களிடம் ,உணர்வும் உங்களிடம் ,பின் ஏன் சிலை வடிக்க வேண்டிய தருணத்தில் தாறுமாறாக உடைக்க வேண்டும் .வெற்றி என்ற நல்ல சிலை உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள் .


.jpg)
